
கோலாலம்பூர், ஜனவரி-6 – செகாம்புட் சுற்று வட்டார அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டிருந்த கட்டுமானங்களை, கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL இடித்துத் தள்ளியிருக்கிறது.
பொது மக்கள் செல்லும் சாலைகள் மற்றும் கால்வாய்களை மூடும் அளவுக்கு சட்டவிரோதமாக கட்டுமானங்களை எழுப்பியிருந்த 10 வியாபாரத் தளங்களுக்கு எதிராக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
DBKL அங்கீகரித்த வரைபடத்தைப் பின்பற்றாமல், அரசு புறம்போக்கு நிலத்தில் சொந்தமாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு வீட்டின் கட்டுமானமும் இடித்துத் தள்ளப்பட்டது.
மேலுமிரு கடைகளின் உரிமையாளர்கள், தாங்களாகவே அந்த கட்டுமானத்தைப் பிரித்து விடுவதாகவும், பொது சாலைகளுக்குத் தடையாக உள்ளவற்றை துப்புரவு செய்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் அவ்வாறு செய்யாவிட்டால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென, தனது facebook பக்கத்தில் DBKL கூறியது.
இவ்வேளையில், மக்கள் செல்லும் வழியை மறைத்து, வியாபாரம் நடத்தி வந்த 7 பேரின் நாற்காலி – மேசைகள், தள்ளுவண்டிகள் உள்ளிட்ட வியாபாரப் பொருட்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
இது போன்ற விதிமீறல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரப்போவதாக DBKL எச்சரித்துள்ளது.