புத்ராஜெயா, ஜனவரி-9, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவை அரசாங்கம் மூடி மறைக்கவில்லை.
அப்படியோர் ஆவணத்தை தொடர்புத் துறை அமைச்சரான தாமே பார்த்ததில்லை என, ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
16-வது பேரரசரான பஹாங் சுல்தான் வழங்கியதாகக் கூறப்படும் அக்கூடுதல் உத்தரவை, மடானி அரசாங்கம் மறைத்து விட்டதாக எழுத்துள்ள குற்றச்சாட்டு குறித்து அவர் கருத்துரைத்தார்.
இவ்விவகாரம் அரச மன்னிப்பு வாரியத்தை உட்படுத்தியது; அதோடு உயர் நீதிமன்றத்தில் அவ்விவகாரம் இருப்பதால், தேசிய சட்டத் துறைத் தலைவரின் ஆலோசனைப் பெறப்படும் என்றார் அவர்.
அக்கூடுதல் உத்தரவு இருப்பதை விசாரிக்குமாறு நஜீப் செய்திருந்த மேல்முறையீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வழக்கு மீண்டும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கே செல்கிறது.
SRC International ஊழல் வழக்கில் டத்தோ ஸ்ரீ நஜீப் பெற்ற 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையைப் பாதியாகக் குறைத்த அப்போதையப் பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா, எஞ்சிய தண்டனைக் காலத்தை நஜீப் வீட்டுக் காவலில் கழிக்கவும் கூடுதல் உத்தரவுப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அது வேண்டுமென்றே மறைக்கப்பட்டு விட்டதாக நஜீப் ஆதரவாளர்களும் எதிர்கட்சியினரும் ஓராண்டாகவே குற்றம் சாட்டி வருகின்றனர்.