
புத்ராஜெயா, ஜனவரி-31, Gred 15 மற்றும் அதற்கு கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி வழங்கப்படும்.
ஒப்பந்த ஊழியர்கள், MySTEP பணியாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள், ஓட்டுநர்களும் அவர்களில் அடங்குவர்.
அதே சமயம், ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர்கள், பென்ஷன் வாங்குபவர்கள், வாங்காதவர்கள் ஆகியோருக்கு அதே நாளில் 250 ரிங்கிட் நிதியுதவி கிடைக்கும்.
பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் Tan Seri Wan Ahmad Dahlan Abdul Aziz கையெழுத்திட்ட சுற்றறிக்கையில் அவ்வறிப்பு இடம் பெற்றுள்ளது.
பிப்ரவரி 25-ல் மரணமடைந்தோருக்கும் இந்நிதி கிடைக்கும்.
இந்த BKK சிறப்பு நிதியுதவிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
இவ்வேளையில், உயர் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு இந்நிதி வழங்கப்படாது.
அதே போல், இவ்வாண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 25 வரை கட்டொழுங்கு நடவடிக்கைக்கு ஆளான, வேலை நீக்கம் செய்யப்பட்ட, பதவியிறக்கம் கண்ட அல்லது பணியிலிருந்து விலகியவர்களும் இதனைப் பெற தகுதிப் பெற மாட்டார்கள்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டோர், கட்டொழுங்குக் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டோருக்கும் அத்தடை பொருந்தும்.
குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படும் வரை அவர்களுக்கான BKK நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என அவ்வறிக்கை மேலும் கூறியது.