
கோலாலம்பூர், மார்ச்-6 – மருத்துவ அதிகாரிகளுக்கு ETAP எனப்படும் On Call வேலைக்கான அலவன்ஸ் தொகை உயர்த்தப்படுமென்ற வாக்குறுதியை அரசாங்கம் மறக்கக் கூடாது என, செனட்டர் Dr ஆர்.லிங்கேஷ்வரன் நினைவுறுத்தியுள்ளார்.
2024 நாடாளுமன்ற அமர்வுகளிலும், 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையிலும் அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
இன்று 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது மாதத்தில் நாமிருக்கிறோம், ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை என மேலவையில் பேசிய போது லிங்கேஷ் சுட்டிக் காட்டினார்.
அரசாங்க சுகாதாரச் சேவையில் உள்ள 80 விழுக்காட்டு மருத்துவ அதிகாரிகள் செய்யும் On Call வேலைக்கு, நடப்பில் 1 மணி நேரத்துக்கு 9 ரிங்கிட் அலவன்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.
அசாதாரண பணிச் சுமையை சுமக்கும் மருத்துவ அதிகாரிகளுக்கு இது எந்த வகையிலும் போதாது.
குறிப்பாக இளம் மருத்துவர்களின் களைப்பு, அழுத்தம் போன்ற பிரச்னைகள் கவலையளிக்கின்றன.
ஆனால் அரசாங்கமோ தொடர்ந்து மௌனம் காப்பதாக லிங்கேஷ் ஏமாற்றம் தெரிவித்தார்.
மருத்துவ அதிகாரிகள் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல; அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் GLC உயரதிகாரிகள் எல்லாம் மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கில் ஊதியம் பெறும் போது, இவர்களுக்கு மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 9 ரிங்கிட்டா என லிங்கேஷ் கேள்வியெழுப்பினார்.
எனவே, கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா இல்லையா? அப்படி நிறைவேற்றப்படுமென்றால் அது எப்போது நடக்கும் என்பதை சுகாதார அமைச்சு தெரிவிக்க வேண்டுமென Dr லிங்கேஷ்வரன் வலியுறுத்தினார்.