
கோலாலம்பூர், மார்ச்-14 – இறக்குமதி செய்யப்பட்ட அரிசியுடன் உள்ளூர் அரிசியைக் கலப்பதாகக் கூறப்படும் அரிசி இறக்குமதியாளர்கள் மற்றும் பொட்டலமிடுபவர்களைக் குறிவைத்து, Op Campur சோதனையின் கீழ் 99 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN அதனை உறுதிப்படுத்தியது.
அந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமுலாக்க அதிகாரிகள் 308 வளாகங்களில் சோதனை நடத்தியதாக, அமைச்சர் அர்மிசான் மொஹமட் அலி தெரிவித்தார்.
அதிகாரிகள் 99 அரிசி மரபணு மாதிரிகளைச் சேகரித்தனர்; அவற்றில் 17 மாதிரிகள் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான MARDI-யில் உள்ள உயிரி மற்றும் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.
அந்த இறக்குமதி அரிசி மாதிரிகளில் உள்ளூர் அரிசிகளின் DNA கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கப் பாயுமென அமைச்சர் எச்சரித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் உள்ளூர் அரிசியையும் கலப்பது தவறான வர்த்தக விளக்கங்களை வைத்த குற்றமாக, 2011 வர்த்தக விளக்கச் சட்டத்தின் கீழ் கருதப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனிநபர்களுக்கு அதிகபட்சம் 100,000 ரிங்கிட் வரை அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்;அதுவே நிறுவனங்கள் என்றால் 250,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றார் அவர்.