
பூச்சோங், ஏப்ரல்-8, புத்ரா ஹைய்ட்ஸ் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுக்காக, தான் ச்சோங் மோட்டார் குழுமம் வாயிலாக சிலாங்கூர் மாநில அரசு, இன்று மேலும் 30 கார்களை இரவலாகக் கொடுத்திருக்கிறது.
அவற்றில் 3 வாகனங்கள் EV எனப்படும் மின்சார வாகனங்களாகும்.
இதையடுத்து இதுவரை மொத்தமாக 140 கார்கள் இரவல் கொடுக்கப்பட்டிருப்பதாக, முதலீடு, வாணிபம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் (Ng Sze Han) கூறினார்.
மேலும் 60 கார்கள் இவ்வாரத்தில் கொடுத்து முடிக்கப்படுமென்றார் அவர்.
சாதாரண வாகனங்கள் வேண்டுமா அல்லது EV கார்கள் வேண்டுமா என்ற விண்ணப்பத்தின் அடிப்படையில், 1 மாதத்திற்கு அவ்வாகனங்கள் வாடகைக்குத் தரப்படுவதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலையறிந்து வாகனங்களை இரவல் கொடுத்த அனைத்து கார் நிறுவவங்களுக்கும் மாநில அரசு நன்றிக் கூறுவதாக இங் ஸீ ஹான் கூறினார்.
இன்று காலை புத்ரா ஹைட்ஸ் LRT நிலைய வளாகத்தில் அந்தத் தற்காலிகக் கார்களுக்கான சாவிகளை ஒப்படைத்த நிகழ்வில் அவர் பேசினார்.
இவ்வேளையில் வாடகைக்குக் கார் கிடைத்தவர்கள், வணக்கம் மலேசியாவிடம் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
புத்ரா ஹைய்ட்ஸ் ஜாலான் ஹார்மோனியைச் சேர்ந்த எஸ். விநாயகம், இந்த இக்கட்டான சூழலில் இது பெரும் உதவியாக இருக்குமென கூறினார்.