
குவாந்தான், ஏப்ரல்-13, சமூக ஊடக விளம்பரத்தை நம்பி அது போலியென தெரியாமல் கடந்தாண்டு தங்க முதலீட்டுத் திட்டத்தில் இணைந்த 72 வயது மூதாட்டி, 2.6 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
கடந்தாண்டு பிப்ரவரியில் சந்தேக நபரால் Facebook மூலமாக அந்த போலி முதலீட்டுத் திட்டம் அவருக்கு அறிமுகமானதாக, பஹாங் போலீஸ் தலைவர் யஹாஹா ஒத்மான் கூறினார்.
பிறகு “xauusd Kelas Pertengahan Elit Malaysia 3” என்ற வாட்சப் குழுவில் சேர்க்கப்பட்டு, தங்க முதலீடு பற்றி பயிற்சியெல்லாம் கொடுக்கப்பட்டதாம்.
3 வெவ்வேறு செயலிகளைப் பயன்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
சந்தேக நபரை முழுமையாக நம்பியதால், அவர் கொடுத்த 2 வங்கிக் கணக்குகளுக்கு கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 60 தடவையாக, மொத்தம் 2.6 மில்லியன் ரிங்கிட் பணத்தை மூதாட்டி மாற்றினார்.
ஆனால், சொல்லியபடி இலாபத் தொகை வந்துசேரவும் இல்லை; அம்மூன்று செயலிகளைப் பயன்படுத்தவும் முடியவில்லை.
இதையடுத்தே தாம் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, தெமர்லோ போலீஸ் நிலையத்தில் நேற்று அவர் புகார் செய்தார்.
சொந்த சேமிப்பு, மறைந்த கணவர் விட்டுச் சென்ற பணம், வீட்டை விற்றதில் கிடைத்த பணம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளின் வாங்கிய கடன் ஆகியவற்றை கொண்டு போய், மொத்தமாக மோசடிக்காரர்களிடம் ‘கொடுத்து’ விட்டு ஏமாந்து நிற்கிறார் அம்மூதாட்டி.