
ஜோர்ஜ் டவுன் , ஏப் 25 – இன்று இரவு 10 மணிக்கு தொடங்கும் திட்டமிடப்பட்ட 60 மணி நேர நீர் துண்டிப்புக்கு ஒரு நாள் முன்னதாக நீர் விநியோகத்தை நிறுத்துவதாக கூறப்படுவதை பினாங்கு நீர் விநியோக கழகம் மறுத்துள்ளது. Sungai Dua நீர் சுத்திகரிப்பு மையம் முழு அளவில் செயல்படுகிறது. திட்டமிடப்படாத நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் புகார்களுக்கு உயரமான இடங்களில் நீர் விநியோகம் கிடைக்காமல் இருந்திருக்கலாம் என பினாங்கு நீர் விநியோக கழகம் தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பயனீட்டாளர்கள் திடீரென அளவுக்கு அதிகமாக நீர் கைருப்பை சேமித்து வைத்தது இப்பிரச்னைக்கு காரணமாககூட இருக்கலாம் என கூறப்பட்டது. சுங்கை ஆரா, சுங்கை பக்காப் மற்றும் சிம்பாங் அம்பாட் ஆகிய இடங்களைச் சேர்ந்த பயனீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே நீர் விநியோகம் தடையை அனுபவித்ததாக நேற்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. பல்லாயிரக்கணக்கான நீர் பயனீட்டாளர்கள் நேற்று முதல் தங்கள் கடைசி நிமிட நீர் சேமிப்புத் திட்டங்களைத் தொடங்கியிருக்கலாம் என்று பினாங்கு நீர் விநியோக கழத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. பத்மநாதன் கூறினார்.
நாங்கள் நேற்று அல்லது இன்று காலை Sungai Dua நீர் சுத்திகரிப்பு மையத்தை நிறுத்தவில்லை. 24 மணி நேரத்திற்கு முன்பே நீர் விநியோகத்தை நிறுத்தியதாகக் கூறி சமூக ஊடகங்களில் வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகள் உண்மையல்ல.
பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள் அச்சமடையவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ கூடாது. திட்டமிடப்பட்ட நீர் விநியோக தடை அமலுக்கு வருவதற்கு இன்னும் சில மணி நேரம் இருப்பதால் பயனீட்டாளர்கள் கையிருப்புக்கான நீரை சேமித்து வைக்க முடியுமென இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். இன்று தொடங்கும் 60 மணி நேர திட்டமிடப்பட்ட நீர் வெட்டுக்கு முன்னதாக இரண்டு நாட்களுக்கு மதிப்புள்ள தண்ணீரை சேமிக்குமாறு பினாங்கு மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில மாநிலம் முழுவதும் 340,000 க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்களுக்கான நீர் விநியோக பாதிப்பை உட்படுத்தியுள்ளது.