
பேங்கோக், ஜூலை-5 – அந்தமான் தீவின் கடலுக்கடியில் உள்ள எரிமலை விரைவில் வெடிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து, மியன்மார், நிக்கோபாரில் ஏற்பட்ட அண்மைய நில அதிர்வுகளை மேற்கோள்காட்டி, தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல கடலியல் நிபுணர் தோன் தம்ரொங்க்னா வசாவாட்
(Thon Thamrongna Wasawat) சமூக ஊடகங்களில் அவ்வெச்சரிக்கையைப் பதிவுச் செய்துள்ளார்.
குறிப்பாக மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள், கடலடியில் எரிமலையின் செயற்கதிரை காண்பிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இது சுனாமி ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாய நிலையாக இருக்கக்கூடும்; ஆனால் தாய்லாந்தின் வளைகுடாவில் சுனாமி நிகழும் வாய்ப்பு மிகக் குறைவே என்றார் அவர்.
அந்தமான் கடலில் பரன் தீவு மட்டுமே மேல்மட்டத்தில் உள்ள தீவிர நிலை எரிமலையாகும்.
தற்போதைய அதிர்வுகள் அந்த இடத்திலிருந்து தெற்கே கடலடியில் உள்ள மற்றொரு பாகத்தில் இருந்து வருகின்றன.
இது வெடிப்பு ஏற்படும் முன்பான மெக்மா நகர்வாக இருக்கலாம் என தோன் கூறினார்.
ஆனால் நிச்சயமாக எப்போது வெடிப்பு நிகழும் என அறுதியிட்டுக் கூற முடியாது.
தாய்லாந்தின் பாங்க் நா கடற்கரையிலிருந்து 470–480 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இங்கு எரிமலை வெடித்தால், பெரும் சுனாமி ஏற்படக்கூடும்.
இது 2022-ஆம் ஆண்டு 20 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளை உருவாக்கிய ஹங்கா டொங்கா (Hunga Tonga) வெடிப்பைப் போல இருக்கலாம்.
எனவே, முன்னெச்சரிக்கையாக மக்கள் 7-8 மாடி உயரமான கட்டிடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தவறான செய்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வமான தரவுகளை மட்டுமே நம்புமாறு தோன் கேட்டுக்கொண்டார்.