
கோலாலம்பூர், ஜூலை-22, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மக்களுக்கான நிதியுதவி குறித்து பேசுவது போல் வைரலாகியுள்ள ஒரு வீடியோ போலியானது என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மாமன்னரின் உருவத்தைப் பயன்படுத்தி AI அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு அவ்வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா (Datuk Rusdi Mohd Isa) அதனைத் தெரிவித்தார்.
அதன் உள்ளடக்கம் போலியானது என்பதால், அதை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களையும் அவர் அறிவுறுத்தினார்.
இந்தப் போலி வீடியோ தொடர்பில் இதுவரை ஒரு போலீஸ் புகார் பெறப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
முன்னதாக @datukzulkarnain77 என்ற டிக் டோக் கணக்கில் அவ்வீடியோ பதிவேற்றப்பட்டு வைரலானது.
அதில், மலேசிய மக்களுக்கு மாமன்னரே நிதியுதவி வழங்குவது போல் சித்தரிக்கப்பட்டு, நிதி பிரச்னையை எதிர்நோக்கும் மலேசியர்கள் Datuk Zulkarnain என்பவரைத் தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது முழுக்க முழுக்க மக்களைச் சிக்க வைக்கும் ஏமாற்று வேலை; எனவே விழிப்போடு இருக்குமாறு போலீஸ் கேட்டுக் கொண்டது.