வெளியாட்கள் மற்றும் கட்சிகளால் பாஸ் எளிதில் ஏமாற்றப்பட்டு குழப்பமடையக்கூடாது; ரமணன் எச்சரிக்கை

புத்ராஜெயா, செப்டம்பர் -18,
வெளியில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் தங்கள் சொந்த அரசியல் நலனுக்காக பாஸ் கட்சியைக் குழப்ப முயல்கிறார்கள் என, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பாஸ் கட்சியை எச்சரித்துள்ளார்.
பாஸ் தற்போது “வீரர்” போல நடித்து நெருங்கும் சில வெளியாட்களால் தவறாக வழிநடத்தப்படுவதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான அவர் கூறினார்.
பாஸ் “அரசியல் கரையான்”களின் வலையில் விழுந்தால், இறுதியில் நாடாளுமன்றத்தில் தங்கள் நிலையை இழக்கும் அபாயம் உண்டு என ரமணன் நினைவுறுத்தினார்.
புத்ராஜெயாவில் Jom@Coop 2025 நிகழ்ச்சியை நிறைவுச் செய்து வைத்தப் பிறகு செய்தியாளர்களிடம் ரமணன் பேசினார்.
தீவிரவாதப் போக்கைக் கொண்டிராத வரை, ம.சீ.ச, ம.இ.கா போன்ற இஸ்லாம் அல்லாத கட்சிகளுடனும் ஒத்துழைக்கத் தயார் என, முன்னதாக பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியிருந்தார்.
அக்கட்சிகளுடன் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.