
சரவாக், செப்டம்பர் 18 – சரவாக்கில், இன்று காலை ஆற்றில் தனியாக சிறிய படகில் வலை வீசிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவன் முதலையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.
சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே, தீயணைப்பு நிலையத்திலிருந்து எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) செயல்பாட்டு மையம் தெரிவித்தது.
சம்பவத்தை நேரில் கண்ட மற்றொரு ஆடவர் தனது படகிலிருந்து சுமார் 10 மீட்டர் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த அச்சிறுவன் தனது படகிலிருந்து வலை வீசிக்கொண்டிருந்ததாகவும் திடீரென அவன் அலறிய சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவுடன் அவன் கண்ணில் படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பின்னர் அவர் தேடிப்பார்த்த போது அச்சிறுவனை காண முடியாததால் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளித்ததாக அவர் மேலும் கூறினார்.
பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மீட்டர் தூரத்தில், சிறுவன் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து அருகிலேயே அவரது சடலத்தை மீட்டனர்.
சிறுவனின் உடல் மற்றும் மார்பில் முதலைக் கடித்த சுவடுகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவனின் சடலம் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.