
கோலாலம்பூர், செப்டம்பர்-25,
இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் மித்ரா வழியாக 5 முக்கியத் திட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன.
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதனைத் தெரிவித்தார்.
இந்தியச் சமூகத்திற்கான முன்னெடுப்புகளின் அமுலாக்கம் மீதான நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் அந்த 5 திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
முதலில், KPKT எனப்படும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் 21 பாரம்பரிய இந்தியக் கிராமங்களில் 33 திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அடுத்ததாக, நாட்டிலுள்ள 527 தமிழ்ப் பள்ளிகளில் 400 பள்ளிகளுக்கு Yayasan Didik Negara அறக்கட்டளை மூலம் smartboard திறன் பலகைகள் வழங்கப்படும்.
மேலும், ஆயிரம் இந்து ஆலயங்களுக்கு one-off அதாவது ஒருமுறை மட்டும் 20,000 ரிங்கிட் சிறப்பு நிதி வழங்கப்படும்.
எனினும் பிரதமரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலுக்குப் பிறகே அதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும் என, பி.கே.ஆர். உதவித் தலைவருமான ரமணன் சொன்னார்.
அந்நிதியை, சமயம், கல்வி அல்லது உள்ளூர் சமூக மையத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.
இவ்வேளையில் இந்திய சிறு தோட்டக்காரர்கள் மற்றும் B40 தொழிலாளர்களுக்கான வீட்டு மேம்பாட்டுத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதோடு, அரசாங்க மற்றும் தனியார் உயர் கல்விக் கூடங்களுக்கு நுழையும் இந்திய மாணவர்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் 2,000 ரிங்கிட் உதவி நிதியும் தொடரப்படும்.
கடந்தாண்டு 8,000 இந்திய மாணவர்கள் அதில் பயனடைந்தனர் என்றார் அவர்.
வரவிருக்கும் கல்வியாண்டில் சீருடைகள் மற்றும் பள்ளி உபகரணங்களை வாங்குவதற்கு, தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு முறை உதவி வழங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
அங்கீகரிக்கப்படும் நிதி அனைத்தும் நேரடியாக உரியவர்களின் கணக்குகளுக்கு செலுத்தப்படும்; இடைத்தரகர்களுக்கு இதில் வேலையிருக்காது என்றும் துணையமைச்சர் உறுதியளித்தார்.
இந்த முயற்சிகள் அனைத்தும் கல்வி, நலன், மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மடானி அரசாங்கம் எடுத்துள்ள உறுதிப்பாட்டின் சான்று என அவர் சொன்னார்.