
கோலாலாம்பூர், செப்டம்பர்-25,
இங்கு வேலை செய்யும் வங்காளதேச ஆடவர் ஒருவர் மாதச் சம்பளமாக 5,000 ரிங்கிட் வரை பெறும் தகவல் வைரலாகி, வலைத்தளவாசிகள் மத்தியில் சூடான விவாததைக் கிளப்பியுள்ளது.
SyokGeng என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப் பட்ட வீடியோவில் Hanis என்ற அந்த வெளிநாட்டவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் தான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
வார இறுதி விடுமுறை இல்லாமல், ஒரு நாளைக்கு சுமார் 10 மணி நேரம் தாம் வேலை செய்வதாகவும், அதற்கே அந்த 5,000 ரிங்கிட் வரையிலான சம்பளம் கிடைப்பதாகவும் அவர் சொன்னார்.
செய்யும் வேலைக்கு ஏற்ற கூலி என்பதால், சொந்த நாட்டுக்குத் திரும்புவதைப் பற்றியே அவர் யோசிக்கவில்லை.
இந்நிலையில், வீடியோவைப் பார்த்த உள்ளூர் இணையவாசிகள், அந்த வங்காளதேசியின் சம்பளத்தைக் கேட்டு வாயடைத்துப் போனதை, அவர்களின் கருத்துகளில் பார்க்க முடிந்தது.
ஏராளமான மலேசியர்கள் இன்னமும் 1,700 ரிங்கிட் என்ற குறைந்தபட்ச சம்பளத்துடன் போராடி வருவதை அவர்கள் ஒப்பிட்டு தங்களின் ஏமாற்றத்தையும் குமுறலையும் வெளிப்படுத்தினர்.
ஆனால், அதே சமயம், விடுப்பில்லாமல் வேலை செய்ய எத்தனை மலேசியர்கள் துணிவார்கள் என்றும் சிலர் ‘நியாயமாக’ கேள்வி கேட்டனர்.
5,000 ரிங்கிட் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு அந்த வங்காளதேசி அப்படி என்னதான் வேலை செய்கிறார், அவருக்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனம் எது, எங்கே உள்ளது என்ற தகவல்களையும் சில வலைத்தளவாசிகள் கேட்காமல் இல்லை…
மாதச் சம்பளமே 5,000 ரிங்கிட் என்றால், அவரின் வங்கிக் கணக்குச் சேமிப்பு எவ்வளவு இருக்கும் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்களேன்…