
லிப்பிஸ், செப்டம்பர்-28,
பஹாங்கின் லிப்பிஸ் மாவட்டம், கம்போங் புத்து கிராம மக்களின் ‘செல்லமாக’ சுற்றி வந்த பெண் தாபீர் நேற்று முன்தினம் இறந்துபோனது.
சுமார் 150 கிலோ எடை கொண்ட அந்த அரிய வகை விலங்கு, இரவு 7.30 மணியளவில் ஒரு தோட்டப் பகுதியில் சடலமாகக் கிடந்தது.
அதன் உடலில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக கிராமத் தலைவர் கூறினார்.
விஷம் கலந்த பொருளையோ திரவத்தையோ அது உட்கொண்டிருக்கக் கூடுமென நம்பப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னுக்குத் தெரிவிக்கப்பட்டு, நேற்று அதிகாரிகள் வந்து தாபீரின் சடலத்தை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
கிராமத்தில் அடிக்கடி சுற்றித் திரிந்தும், மக்களைப் பார்த்து அஞ்சாதும் அது இருந்து வந்தது.
சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு கூட அது கிராமத்தில் உணவு தேடிக் கொண்டிருந்தது.
இப்படி அனைவராலும் விரும்பப்பட்ட உயிரினமாக வலம் வந்த தாபீரின் சாவு, கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.