
கோலாலம்பூர், அக்டோபர்-4,
மலேசியக் கல்வித்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அ.சு.பாஸ்கரன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு (தோற்றம், ஏற்றம், மாற்றம்) எனும் முக்கிய நூலை எழுதியுள்ளார்.
அதன் வெளியீட்டு விழா எதிர்வரும் அக்டோபர் 7, செய்வாய்க் கிழமை கிள்ளான், விண்டம் அக்மார் தங்கும் விடுதியில் (Wyndham Acmar Hotel) நடைபெறவுள்ளது.
ம.இ.கா தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் இந்நூல் வெளியீடு நடைபெறுகிறது.
இந்நூல், அடுத்தத் தலைமுறைக்கும் சேர்த்து, மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றுத் தடங்களைப் பதிவுச் செய்யும் வாய்ப்பை தமக்கு வழங்கியுள்ளதாக, பாஸ்கரன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இந்த நூல் வெளியீட்டில் சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் தான் ஸ்ரீ Dr எஸ். சுப்பிரமணியம், தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ பி. சகாதேவன், முன்னாள் துணையமைச்சர்கள் தான் ஸ்ரீ க.குமரன், டத்தோ பி. கமலநாதன் ஆகியோர் சிறப்பு வருகை புரியவிருக்கிறார்கள்.
நூலாய்வினை மலாயா பல்கலைக்கழக முன்னாள் இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் மேற்கொள்வார்.
பிற்பகல் 3 மணிக்கு சிற்றுண்டியுடன் தொடங்கி மாலை 7.00 மணிக்கு நிறைவுறும் வகையில் இவ்வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறிஞர் பெருமக்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பெரும்பான்மையாக இந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்கள், தமிழ் ஆர்வலர்களும், பொது மக்களும் திரளாக வந்து கலந்து
கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்