
பாங்காக், அக்டோபர்- 6,
கடந்த சனிக்கிழமை இரவு, தாய்லாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று கூண்டிலிருந்து தப்பி வெளியேறி, சாலையில் நடந்து சென்ற சிறுவனை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அந்நாட்டின் வனவிலங்கு துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்துக்குப் பிறகு அதிகாரிகள் சிங்கத்தை பறிமுதல் செய்து வனவிலங்கு இனப்பெருக்க மையத்தில் பாதுகாப்பாக அதனை வைத்துள்ளனர்.
சிங்கத்தின் உரிமையாளர், கூண்டை மேம்படுத்தும் பணியின் போது சிங்கம் தப்பியதாகவும், அதற்கு மன்னிப்பு கோருவதோடு, சிறுவனின் சிகிச்சை செலவுகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தாய்லாந்தில் சிங்கங்களை தனியார் முறையில் வளர்ப்பது சட்டபூர்வமானது. தற்போது விலங்குக் காட்சிச்சாலைகள், இனப்பெருக்கப் பண்ணைகள், செல்லப்பிராணி கஃபேக்கள் மற்றும் தனியார் வீடுகளில் சுமார் 500 சிங்கங்கள் வளர்க்கப்படுவதாக தரவுகள் காட்டுகின்றன.
ஆனால் நிபுணர்கள், இந்தப் போக்கு மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானதோடு, சட்டவிரோத விலங்கு வணிகத்தையும் ஊக்குவிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.