
கோலாலம்பூர், அக்டோபர் 9 –
வீட்டு வேலை செய்யவில்லை என்ற காரணத்தால் தனது 11 வயது மகளை தாக்கி துன்புறுத்திய தந்தைக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 8,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
கெப்போங் மெட்ரோபாலிட்டன் தாமான் வீட்டில் நடைபெற்ற அச்சம்பவத்தின் போது குற்றவாளியின் மகள் தட்டுகளை கழுவாததும் சமையலறையை சுத்தம் செய்யாததுமே தன்னை ஆத்திரமடையச் செய்ததாக அந்த ஆடவன் ஒப்புக்கொண்டுள்ளான்.
இந்நிலையில் நீதிமன்றம் விதித்த அபராதத்தை குற்றவாளி செலுத்தத் தவறினால் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனுடன், அந்நபர் இரண்டு ஆண்டுகள் நல்ல நடத்தையில் இருக்க வேண்டுமெனவும் உத்தரவாதத்துடன் கூடிய .1,000 ரிங்கிட் ஜாமீன் தொகையையும் வழங்க வேண்டுமென்றும் அடுத்த ஆறு மாத காலக்கட்டத்தில் மொத்தம் 36 மணி நேர சமூக சேவை செய்யவும் நீதிமன்றம் அந்நபரை பணித்தது.
வழக்கறிஞர்களின் உதவியின்றி தாமே தன்னை முன்னிலைப்படுத்தி நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் வருகை தந்த அந்தக் குற்றவாளி, தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து தண்டனையைத் தளர்த்துமாறு வேண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளியின் வன்முறை காரணமாக சிறுமி மன உளைச்சலில் வீட்டைவிட்டு ஓடிச் சென்று பின்னர் பொதுமக்கள் அவளை மீட்டு காவல்துறைக்கு ஒப்படைத்தனர்.
மருத்துவ பரிசோதனையில், சிறுமிக்கு உதட்டுக்குக் கீழே வீக்கம், முதுகில் சொறி காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது