
கோலாலம்பூர், அக் 24 –
தொழிலதிபர் லோ டேக் ஜோ ( Low Taek Jho)
அல்லது ஜோ லோ ( Jho Low ) மீதான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.
விசாரணை தொடர்பான ஆகக் கடைசி விவரங்களை தனது தரப்பு ஆய்வு செய்து வருவதோடு, விசாரணையின் தேவைகளுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.
இதற்கு முன் அறிவிக்கப்பட்டபடி இன்னும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இந்த விவகாரத்தை பகிரங்கமாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
அதோடு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது என இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமட் காலிட் விவரித்தார்.
1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் (1MDB) நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணைகளில் உதவ ஜோ லோ இன்னும் தேடப்படும் நபராக உள்ளார்.
சீனாவின் ஷாங்காயில் போலி அனைத்துலக கடப்பிதழை பயன்படுத்தி அங்கு வசிப்பதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஜோ லோ குறித்து மலேசியா எந்தத் தகவலையும் பெறவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
1MDB ஊழலுக்குப் பின்னால் முக்கிய மூளையாகச் செயல்பட்ட ஜோ லோ குறித்து மேலும் தகவல்களைப் பெற உள்துறை அமைச்சருடன் இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்வதாக ஊடகங்களுக்கு அளித்த சுருக்கமான பதிலில் பிரதமர் கூறியிருந்தார்.



