
கோலாலம்பூர், அக்டோபர்-26,
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இன்று மலேசியா வருவதை எதிர்த்து, மோட்டார் சைக்கிள் அணிவகுப்பில் பங்கேற்ற சுமார் 50 ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றிரவு போலீசாஸாரால் கைதுச் செய்யப்பட்டனர்.
இரவு 10 மணியளவில் போராட்டக்காரர்கள் கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கடந்து ஊர்வலமாகச் சென்றனர்.
பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியபடி சென்ற சிலர், இஸ்ரேலுடனான அமெரிக்க உறவுகளை விமர்சிக்கும் கோஷங்களையும் எழுப்பினர்.
“மலேசியாவே… எழுந்து வா.. டோனல்ட் டிரம்பை விரட்டியடி” என்று போராட்டக்காரர்கள் கூச்சலிட்டனர்.
எனினும் அமெரிக்க தூதரகத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள மெனாரா தாபோங் ஹாஜிக்கு முன்னால் உள்ள சாலைத் தடுப்பில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் கிழக்கு ஆசியான் உச்சநிலை மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக டிரம்ப் வருகை தருவதற்கு எதிராக நேற்று முன்தினம், சுமார் 700 பேர் அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் நெருங்கிய பங்காளிகள் என்பதால் ட்ரம்பின் வருகை, பாலஸ்தீன ஆதரவாளர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
என்றாலும், காசாவில் நடந்த – நடக்கும் இஸ்ரேலின் அட்டூழியங்கள் குறித்த கவலைகளை ட்ரம்பிடம் நேரில் தெரிவிக்கும் இராஜதந்திர வழியாக இவ்வாய்ப்பை மலேசிய பயன்படுத்திக் கொள்ளுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.



