Latest

பினாங்கில் 7 தெருநாய்கள் விஷம் கொடுத்து கொலை; காவல்துறையிலும் கால்நடைத் துறையிலும் புகார்

பாலிக் புலாவ், அக்டோபர் 30 –

பினாங்கு பாலிக் புலாவிலிருக்கும் (Balik Pulau) குடியிருப்பு பகுதியில், ஏழு தெருநாய்க்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவல்துறையிலும் மலேசிய கால்நடை சேவைகள் துறையிலும் (DVS) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்களைக் கடந்த ஓராண்டாக பெனாரா 12 (Penara 12) பகுதியில், பராமரித்து வந்த தம்பதியினர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு,உணவு வழங்கச் சென்ற பொழுது நாய்கள் உயிரின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதல் நாய் இறந்து கிடைப்பதைக் கண்டு அவர்கள், அது வாகன விபத்து என்று நினைத்துள்ளனர். பின்பு தொடர்ந்து மற்ற நாய்களுக்கு உணவு அளிக்கச் சென்றபோது, மேலும் ஆறு நாய்கள் இறந்திருந்தன எனவும், அவற்றின் வாயில் நுரை இருந்ததுடன் காயங்கள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

நாய்கள் கிடந்த இடத்தில் அரிசி நிரப்பிய பிளாஸ்டிக் பை ஒன்று கிடைத்ததாகவும், அதில் விஷம் கலந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

விஷம் உட்கொண்டதாக நம்பப்பட்ட மேலும் நான்கு நாய்கள், உடனடியாக Cuddles Veterinary Clinic-க்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, அவைகள் தற்போது சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிகாரிகள் இறந்த நாய்களில் ஒன்றின் உடலை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மற்ற நாய்களை பினாங்கு தெருநாய்கள் மீட்பு சங்கத்தினர் (PGSR) அடக்கம் செய்தனர் என்று அதன் இணை நிறுவனர் தெய் சிங் சு (Tay Ching Szu) தெரிவித்தார்.

காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள அதே நேரம்,
கடந்த ஆண்டும் இதேபோல் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் பாலிக் புலாவ் பகுதியில் மர்மமான முறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!