மலேசியர்கள் பரிவானவர்கள் தான், ஆனால் விபத்தில் சிக்கியவர்களைத் தொடாதீர்கள் – நிபுணர்கள் எச்சரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர் 30 –
விபத்தில் சிக்கியவர்களை உடனே காப்பாற்றலாமா, இல்லையா என்ற விவாதம் இன்றும் சமூக ஊடகங்களில் பரவலாக நடைபெற்று வருகிறது.
ஆனால் சாலை விபத்து போன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் தாங்களே காப்பாற்ற முயல்வது ஆபத்தானதாக அமையலாம் என்றும் தவறான முறையில் உதவுவது, பல நேரங்களில் உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
விபத்தின் போது அருகில் உள்ளவர்கள், காயமடைந்தவர்களின் நிலையை அறிந்துக் கொள்ள மட்டுமே முயற்சிக்க வேண்டுமே தவிர அவர்களை தொடவோ, நகர்த்தவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவர் டாக்டர் அலிஃப் ஸாக்கி, மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியவரின் தலைக்கவசத்தை ஒருபோதும் நீக்க முயல கூடாது என்றும் வலியுறுத்தினார்.
தவறான முறையில் ஹெல்மெட்டை அகற்றுவது முதுகெலும்பு அல்லது நரம்பு தண்டுக்கு (spinal cord) சேதம் ஏற்படுத்தி, முழு உடல் ஊனமுற்று மரணத்திற்கும் காரணமாக அமையக்கூடும்.”
மிக முக்கியமாக, விபத்து இடத்தில் சிக்கியவர்களை தாங்களே காப்பாற்ற முயல்வதை விட, உடனடியாக 999 என்ற அவசர எண்ணை அழைத்து, நிபுணர்களை வரவழைப்பதே சிறந்த தீர்வாகும்.



