நேப்பாளத்தில் பனிச்சரிவு: மூவர் பலி; நால்வரைக் காணவில்லை

நேப்பாளம், நவம்பர் 4 –
நேப்பாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள யாலுங் ரி (Yalung Ri) மலை அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நால்வரைக் காணவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
5,630 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை ஏறிச் சென்ற 12 பேர் கொண்ட குழுவைப், பனிச்சரிவு தாக்கியதாக உள்ளூர் காவல் அதிகாரி தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் இருவர் நேப்பாளத்தைச் சார்ந்தவர்கள் என்றும் ஒருவர் வெளிநாட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
அமெரிக்கா, இத்தாலி, மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டாலும் ‘ஹெலிகாப்டர்’ தற்போது சம்பவ இடத்திற்கருகே தரையிறங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம், ‘மொந்தா’ சூறாவளி ஏற்படுத்திய கனமழை மற்றும் பனிச்சாரலினால் பல சுற்றுலாப் பயணிகள் நேப்பாளத்தின் மலையேற்ற பாதைகளில் சிக்கிக் கொண்டனர். அதேசமயம், மேற்குப் பகுதியில் இரண்டு இத்தாலிய மலையேற்ற ஆடவர்களும் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.



