
சிங்கப்பூர், நவம்பர்-5,
சிங்கப்பூரில் மோசடிகளால் விளையும் நட்டங்கள் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதை அடுத்து, இணைய மோசடிக்காரர்களுக்கு குறைந்தபட்சம் 6 பிரம்படி தண்டனை வழங்க அந்நாட்டரசு திட்டமிட்டுள்ளது.
2020 முதல் 2025 பாதி வரை மோசடிகளால் 2.8 பில்லியன் அமெரிக்க டாலரை அக்குடியரசு இழந்துள்ளது.
அக்காலகட்டத்தில் சுமார் 190,000 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனைக் கருத்தில்கொண்டே இணைய மோசடிகளுக்கு குறைந்தது 6 பிரம்படிகளை கட்டாய தண்டனையாக வழங்க நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
மோசடி கும்பல்களில் ஈடுபடும் நபர்களும், அவர்களை ஆட்சேர்ப்பு செய்பவர்களும் இதேபோல தண்டிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
தவிர, தங்கள் வங்கி கணக்கு அல்லது சிம் அட்டைகளை வழங்கி மோசடிகளுக்கு உதவும் ‘money mules’ நபர்களுக்கு அதிகபட்சம் 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
மோசடிகளை தடுக்க சிங்கப்பூர் அரசு அண்மைய ஆண்டுகளில், ScamShield செயலி, தேசிய ஹோட்லைன் போன்ற முயற்சிகளை தொடங்கியுள்ளது.
பல கோடி டாலர் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டிஷ்-கம்போடிய தொழிலதிபர் Chen Zhi-யின் 115 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்கள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



