டிசம்பர் தொடக்கத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்கிறாரா அன்வார்? ரமணன் முழு அமைச்சரா

புத்ராஜெயா, நவம்பர்-1, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த மாதத் தொடக்கத்தில் அமைச்சரவையை மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி Malaysia Gazette பரபரப்பான இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக உள்ள டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இம்முறை முழு அமைச்சராக பதவி உயர்வு பெறலாமென பேச்சு அடிபடுகிறது.
KUSKOP அமைச்சர் பதவியிலிருந்து டத்தோ Ewon Benedick விலகியிருப்பதால், அவ்விடத்தை பி.கே.ஆர் உதவித் தலைவருமான ரமணன் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை அது நடந்தால், ஒரே தேர்தலில் அதுவும் மூன்றே ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர், துணை அமைச்சர், முழு அமைச்சர் என அசுர வளர்ச்சி கண்டவராக அவர் பெயர் பதிப்பார்.
இவ்வேளையில், மேலுமிரண்டு முக்கிய நியமனங்கள் நாட்டு மக்களுக்கு ஆச்சரியமூட்டலாம்.
முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் செனட்டராக நியமிக்கப்பட்டு, பி.கே.ஆரின் Nik Nazmi Nik Ahmad விட்டுச் சென்ற சுற்றுச் சூழல் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் பதவியை நிரப்புகிறாராம்.
அதே சமயம் அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ Johari அப்துல் கனி MITI எனப்படும் முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சுக்கு மாறலாமெனக் கூறப்படுகிறது.
முக்கிய அமைச்சுகளில் ஒன்றான MITI தற்போது டத்தோ ஸ்ரீ Tengku Zafrul வசமுள்ளது; என்றாலும் அவரின் செனட்டர் பதவிக் காலம் விரைவில் முடிவடையவிருப்பதால், அவருடைய இடத்தை தற்போது மூலப் பொருள் தோட்டத் தொழில் அமைச்சராக இருக்கும் Johari நிரப்புகிறாராம்.
இன்னொரு முக்கிய அம்சமாக டத்தோ ஸ்ரீ Rafizi Ramli விட்டுச் சென்ற பொருளாதார அமைச்சு நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்படுகிறது.
முந்தைய அரசாங்களில் EPU என்ற பெயரில் விளங்கி வந்த பொருளாதாரத் திட்டமிடல் பிரிவாக இனி அது இயங்கி வரும்.
Tengku Zafrul , அரசாங்கத்தின் மூத்த பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அப்பிரிவுக்குத் தலைமையேற்பார்.
2022 கடைசியில் ஒற்றுமை அரசாங்கம் அமைந்த பிறகு மடானி அமைச்சரவையில் அன்வார் செய்யப்போகும் முக்கியமான மாற்றமாக இது இருக்குமெனக் கூறப்படுகிறது



