
சுங்கைப் பட்டணி, நவ 13 – சுங்கைப் பட்டாணி, UTC யிலுள்ள குடிநுழைவு அலுவலகத்தில் 8 வயது இலங்கை சிறுவனுக்கு சட்டவிரோதமாக மலேசிய கடப்பிதழ் பெற முயன்ற 30 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காலை 9.30 மணியளவில் அந்த சிறுவனுடன் கடப்பிதழ் முகப்பிடத்திற்கு வந்து கடப்பிதழ் விண்ணப்பத்தை சமர்ப்பித்தபோது அப்பெண் கைது செய்யப்பட்டார்.
பிறப்பு பத்திரத்தில் இடம்பெற்ற சுய விவரங்களை கொண்ட தகவல்கள் குறித்த எளிமையான கேள்விகளுக்கு அச்சிறுவன் பதில் அளிக்கத் தவறியதால் குடிநுழைவு அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.
பேட்டியின்போது தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு அச்சிறுவன் தவறான பதிலை கூறியதால் அதிகாரிகளின் சந்தேகம் மேலும் வலுத்தது.
கடப்பிதழ் விண்ணப்பத்தின் நோக்கம் குறித்து அந்தப் பெண் முரண்பாடான மற்றும் சந்தேகத்திற்குரிய விளக்கங்களை வழங்கியதாக குடிநுழைவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. பின்னர் அந்தப் பெண் மற்றும் சிறுவன் இருவரும் மேல் விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசாரணைக்குப் பின்னர் அந்தப் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட சிறுவனுடன் எந்த குடும்ப உறவும் இல்லை என்பதும், கடப்பிதழ் விண்ணப்ப முயற்சிக்குத் தயாராவதற்காக அச்சிறுவனுக்கு இரண்டு வாரங்கள் பயிற்சி வழங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக அப்பெண் கைது செய்யப்பட்டார்.



