Latest

பிரசவத்திற்கு 4 மருத்துவமனைகள் அனுமதி மறுத்ததால் குழந்தையோடு கர்ப்பினி மரணம்

ஜகர்த்தா , நவ 21 – இந்தோனேசியாவில் சென்தானி
( Sentani ) மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பினி ஒருவர் பிரசவ முயற்சியில் நான்கு மருத்துவமனைகளால் சிகிச்சை மறுக்கப்பட்டதால், பிறக்காத குழந்தையுடன் அவர் இறந்துவிட்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐரீன் சோகோய் ( Irene Sokoy ) என அடையாளம் கூறப்பட்ட அந்தப் பெண், தனது குழந்தையைப் பிரசவிக்க தனது கிராமத்திலிருந்து அதிகாலை 3 மணியளவில் விரைவுப் படகு மூலமாக முதலில் யோவாரி ( Yowari ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். வயிற்றில் நான்கு கிலோ எடையுள்ள குழந்தை இருப்பதால் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை தேவையென்பதால் சிகிச்சை வழங்க Yowari மருத்துவமனை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர் அங்கிருந்து அபேபுரா (Abepura ) மற்றும் டியான் ஹராப்பன் ஆகிய மருத்துவமனைக்கு ஐரீன் கொண்டுச் செல்லப்பட்டபோதிலும் அந்த இரு மருத்துவமனைகளும் சிகிச்சை வழங்க மறுத்துவிட்டன.

பின்னர் ( Bhayangkara ) என்ற மற்றொரு மருத்துவமனைக்கு அப்பெண் அனுப்பப்பட்ட போதிலும் அங்கு பிரசவ அறுவை சிகிச்சைக்கு எட்டு மில்லியன் ரூபாய் (சுமார் 26,450 ரிங்கிட் ) வழங்குமாறு குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. பணம் செலுத்த முடியாததால், குடும்பத்தினர் ஜெயபுரா (Jayapura ) வட்டார பொது மருத்துவமனைக்கு ஐரீனை அழைத்துச் சென்றபோதிலும் வழியில் அப்பெண்ணும் அவரது பிறக்காத குழந்தையும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு உள்ளாகினர். இதனிடையே அந்த கர்ப்பினி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகளுக்கு எதிராக பப்புவா ஆளுநர் மத்தியுஸ் பக்ரி ( Mathius Fakhiri ) தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!