
பெந்தோங், ஜனவரி-22-மொழி தொடர்பான முடிவில்லா விவாதங்களை நிறுத்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறைகூவல் விடுத்துள்ளார்.
பல மொழிக் கல்வி முறையின் நோக்கம் மலாய் மொழியின் மாண்பைக் குறைப்பது அல்ல, மாறாக தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, மாணவர்கள் பல மொழிகளை கற்றுக்கொள்ள சம வாய்ப்பை வழங்குவதே என, பஹாங், பெந்தோங் தேசிய சீனப் பள்ளியில் இன்று சீன சமூகத்துடன் நடத்திய சந்திப்பில் பேசியபோது அன்வார் கூறினார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுத் தேருவது, இன்றைய உலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு பெரிய சொத்தாக இருக்கும்; இதனால் தேசிய அடையாளத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றார் அவர்.
“எனவே, மொழி விவகாரங்களைச் சுற்றிய இன மோதல்கள் நமக்குள் இனி வேண்டாம். மாறாக, குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தையும் எதிர்காலத்தையும் மேம்படுத்துவதில் தான் நமது முன்னுரிமை இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், Perting சீனப் பள்ளிக்கான கூடுதல் வசதிகளுக்காக RM13.5 மில்லியன் ஒதுக்கீட்டை அங்கீகரித்த பிரதமர், ஆரம்பப் பணிகளுக்காக RM300,000 உடனடியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கல்வி மேம்பாடு தேசிய ரீதியில் பார்க்கப்பட வேண்டும் என்றும், இன வேறுபாடுகளைத் தாண்டி பள்ளிக் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பயிற்சி, மற்றும் கல்வி தரத்தை உயர்த்துவது முக்கியம் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.



