
ஜோகூர், பிப்ரவரி 3 – அரசாங்கம் வழங்கிய RON95 பெட்ரோல் மானியத்தை, சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியிலிருக்கும் Eco Botani பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் மீது அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தகவல் கிடைத்தவுடன் அந்த பெட்ரோல் நிலையத்தின் CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அதன் அடிப்படையில், வெளிநாட்டு பதிவு எண்ணுடன் உள்ள Honda Spada வாகனம், அந்த நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது உறுதிச் செய்யப்பட்டதென்று அத்துறையின் இயக்குநர் Lilis Saslinda Pornomo தெரிவித்திருந்தார்.
மேலும் ரசீதுகள் மற்றும் பரிவர்த்தனை பதிவுகளைச் சரிபார்த்ததில், நிரப்பப்பட்ட எரிபொருள் RON95 என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெளிநாட்டு பதிவு வாகனங்களுக்கு RON95 விற்பனை செய்யக் கூடாது என்ற விநியோக கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென்று கூறப்படுகின்றது.



