
கோலாலம்பூர், ஜூன் 30 – 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,557 சிறார்கள் காணாமல்போன சம்பவங்கள் போலீசில் பதிவாகியுள்ளன. இதில் 2023-ஆம் ஆண்டைத் தவிர மற்ற அனைத்து ஆண்டுகளிலும் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தன.
2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023-ஆம் ஆண்டில் காணாமல் போன சிறார்கள் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கையில் 13.8 விழுக்காடு பதிவானதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் இஸ்மாயில் தெரிவித்தார்.
காணாமல் போன சிறார்கள் தொடர்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2021-இல் 594-ஆகவும், 2022-இல் 903-ஆகவும், 2023-இல் 778-ஆகவும், 2024-இல் 1,063-ஆகவும் மற்றும் 2025-இல் 1,219-ஆகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரங்களை கையாள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக, அத்தகைய சிறார்கள் குறித்த ஒவ்வொரு புகாரும் உடனடியாக ‘காணாமல் போன சிறார் என வகைப்படுத்தப்படும்.
இதன் மூலம், குறிப்பிட்ட கால அளவு வரை காத்திருக்காமலேயே அவர்களைத் தேடும் மற்றும் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட சிறார்களை கண்டறிந்து மீட்கும் முயற்சிகளில், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு, சமூக நலத் துறை , மலேசியக் குடிநுழைவுத்துறை , பள்ளிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளுடனான ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.



