Latestமலேசியா

ஹோபர்ட் ராணுவ முகாமில் மீண்டும் சம்பவம் – பயிற்சியின்போது இருவர் காயம்

குருன், ஜூன்-30- குருனுக்கு அருகிலுள்ள ஹோபர்ட் முகாமில் நேற்று கனரக ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டபோது , ​​சிதறிய உலோகத் துண்டுகள் தாக்கியதில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஜூன் 16 ஆம் தேதியன்று அந்த முகாமில் கையெறி குண்டு வீசும் பயிற்சியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதே முகாமில் சுமார் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

நேற்று மாலை மணி 6.05க்கு நடைபெற்ற இச்சம்பவத்தில், பயிற்சி பெறும் 29 வயது கார்ப்பரல் ஒருவரின் இடது முழங்காலிலும், பயிற்சி அளிக்கும் சார்ஜென்ட் ஒருவரின் இடது தொடையிலும் காயம் ஏற்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா (Adzli Abu Shah ) தெரிவித்தார்.

ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி இந்த வியாழக்கிழமைவரை நடைபெறவிருந்த பல்வேறு ஆயுதப் பயிற்சிகளில் பாதிக்கப்பட்ட இருவரும் மற்ற பங்கேற்பாளர்களுடன் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

ராணுவத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றியதோடு , பயிற்சியாளராக ஒன்பது ஆண்டுகள் அனுபவம் பெற்றவருமான பயிற்சி அளிக்கும் சார்ஜென்ட் சிகிச்சைக்குப் பின் சிக் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

அப்பகுதியில் இருந்த பொருட்களின் சிதறல்கள் தாக்கியதாலேயே காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.

அதிகப்படியான ரத்தப்போக்குடன் நரம்புப் பாதிப்பும் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் அஞ்சியதால், பயிற்சி பெறுபவர் Sultan Abdul Halim மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்த போதிலும் , துப்பாக்கிச் சூடு நடந்தபோது ஆயுதம் இயல்பாகவே நின்றுவிட்டது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அட்லி அபு ஷா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!