
குவைத், அக்-01- குவைத்–ஈராக் எல்லைப் பகுதியை ஒட்டிய Abdali எனுமிடத்தில் தனது முதுகில் சிறிய துணிப்பையைச் சுமந்து சென்ற புறா ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பையைச் சோதனை செய்ததில், 178 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை Ketamine வகையைச் சேர்ந்த மாத்திரைகள் என நம்பப்படுகிறது.
ஈராக்கிலிருந்து குவைத்துக்குள் போதைப்பொருளைக் கடத்துவதற்காக அந்தப் புறா பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புறாவின் முதுகில் சிறிய பை கட்டப்பட்டிருந்தது அச்சம்பவத்தில் முக்கிய ஆதாரமாகவும் அமைந்தது.
போதைப்பொருளைக் கடத்துவதற்கு கடத்தல்காரர்கள் புறாக்களைப் பயன்படுத்தி வருவது குறித்து அதிகாரிகள் ஏற்கனவே அறிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. புறா போதைப்பொருளைச் சுமந்து பிடிபடுவது இது முதல் முறையல்ல. 2015 ஆம் ஆண்டு, Costa Ricaவில் உள்ள சிறைச்சாலைக்குள் போதைப்பொருளுடன் பறந்து சென்ற புறா ஒன்று பிடிபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
புறாக்களுக்கு தங்களின் இருப்பிடத்தை துல்லியமாகக் கண்டறிந்து திரும்பும் இயல்பான திறன் இருப்பதால், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி கடத்தல்காரர்கள் அவற்றை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன வழிகளில் கண்காணிப்பு அதிகரித்துள்ள நிலையில், சில கடத்தல் முயற்சிகளில் விலங்குகளைப் பயன்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.



