
அலோர் ஸ்டார், பிப்ரவரி 4 – போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் பயணித்த கார், நேற்று அலோர் ஸ்டார் Jalan Suka Menanti சாலையில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் ‘Op Gempur’ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற பெரோடுவா மைவி காரை கவனித்தனர். அதனை பின்தொடர்ந்த போது, அந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று கோத்தா ஸ்டார் மாவட்ட காவல் துறை தலைவர், Asisten Komisioner Syed Basri Syed Ali கூறினார்.
போலீசார் மேற்கொண்ட சோதனையில், 210 கிராம் எடையுள்ள heroin போதைப்பொருள் அடங்கிய ஒரு பிளாஸ்டிக் பை கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், காரை ஓட்டிய 37 வயதுடைய பெண்ணுக்கு, முன்பு 12 போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த அவரது தோழிக்கு, மூன்று போதைப்பொருள் வழக்குகள் மற்றும் ஒரு குற்றவியல் பதிவு இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு போதைப்பொருள் சட்டம் மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் ஆகிய 2 சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.



