
கோலாலம்பூர், பிப்ரவரி-6-பழையக் கோவில்கள் ‘kuil haram’ என அழைக்கப்படுவது தவறான புரிதலை ஏற்படுத்துவதாக, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
“பல கோவில்கள் நிலச் சட்டம் உருவாகும் முன்பே சமூகத் தேவைக்காக கட்டப்பட்டவை. சட்டத்தை மீறுவதற்காக அல்ல, சமூகத்தின் நம்பிக்கைக்காகவே அவை உருவானவை” என விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
எனவே, பொத்தாம் பொதுவாக ஆலயங்களை ‘சட்டவிரோதமானவை’ என அழைப்பது முறையல்ல என்றார் அவர்.
கோவில்களை இடிக்காமல், மாற்று நிலம், இடமாற்றம் அல்லது நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
“சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை காக்க, இந்த பிரச்னையை விவேகத்துடன் தீர்க்க வேண்டும். பேச்சு சுதந்திரம், இனங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தக் கூடாது” என அவர் எச்சரித்தார்.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆலயங்களுக்கு எதிராக நாளை கோலாலம்பூர் SOGO-வில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் விக்னேஸ்வரன் அவ்வாறு கூறினார்.
“எந்தவொரு சமூகத்தின் வரலாறு அல்லது மரியாதையை சிறுமைப்படுத்தாமலும், உரிமையை புறக்கணிக்காமலும் சட்டத்தி மாண்பைக் காக்க முடியும்” என்றார் அவர்.



