TUDM பயிற்சி வீரர் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: இரண்டாவது உடற்கூறு பரிசோதனைக்கு பினாங்கு ம.இ.கா தினகரன் வலியுறுத்தல்

ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-20,
குவாந்தான் விமானப்படை முகாமில் உயிரிழந்த அரச மலேசிய ஆகாயப்படை பயிற்சி வீரர் க. இந்திரனின் மரணத்தில் இரண்டாவது உடற்கூறு பரிசோதனை நடத்த வேண்டும் என, பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ. தினகரன் வலியுறுத்துகிறார்.
22 வயது இந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது குடும்பத்தினருக்கு தகவல் தரப்படவில்லை.
பின்னர் அவர் உயிரிழந்ததாக மட்டுமே அறிவிக்கப்பட்டது.
இதனால் அவரது தாய் போலீஸ் புகார் அளித்து, துன்புறுத்தல் நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்திரனின் தந்தை மேஜர் கயாம்பு செல்லம் சில ஆண்டுகளுக்கு முன் பீச்கிராஃப்ட் B200T விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், மகனின் மரணம் மேலும் வேதனையை ஏற்படுத்துவதாக தினகரன் குறிப்பிட்டார்.
இந்திரனின் முதல் உடற்கூறு அறிக்கையில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என கூறப்பட்டாலும், உள் காயங்கள் இருக்கலாம் என்பதால் விசாரணை தொடர வேண்டும் என தினகரன் வலியுறுத்துகிறார்.
சபாவில் நடந்த சாரா கைரினா வழக்கைப் போல இந்த வழக்கும் மறக்கப்படக்கூடாது என்று எச்சரித்து, போலீஸ் மற்றும் விமானப்படை அதிகாரிகள் முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என, அறிக்கை வாயிலாக அவர் கோரிக்கை விடுத்தார்.
புதன்கிழமை விமானப் படைத் தளத்தில் சுயநினைவின்றி கிடந்த இந்திரன், உடனடியாக குவாந்தான் தெங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், நேற்று மாலை உயிரிழந்தாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.



