Latestமலேசியா

8 ஆண்டு கால சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு நெகிரி செம்பிலான் PH தேர்தல் அறிக்கை வெளியீடு; 5-அம்ச உயர் தாக்கம் கொண்ட திட்டங்கள்

சிரம்பான், ஜூலை-21 – நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையைப் பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்த அனுபவத்தின் அடிப்படையில், நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே இந்த அறிக்கை கொண்டுள்ளதாக மாநில PH தலைவர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் தெரிவித்துள்ளார்.

​இந்த அறிக்கையின் மையமாக 5 பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சிரம்பான் சென்ட்ரல் கட்டுமானம், Bandar Enstek-கில் புதிய மருத்துவமனை, போர்டிக்சனில் புதிய பன்னாட்டுத் துறைமுகம் மற்றும் செனாவாங் – கிள்ளான் துறைமுக இரயில் பாதை இணைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 30,000 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், 20,000 மலிவு விலை வீடுகளைக் கட்டுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக Skim Sejahtera Rakyat எனப்படும் மக்கள் நல்வாழ்வுத் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ் பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் RM1,500 வரை பண உதவியும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாழ்க்கைச் செலவுத் தொகையாக 2,400 ரிங்கிட்டும், இலவச மடிக்கணினிகளும் வழங்கப்படும்.

மேலும், முதல் வகுப்பு பட்டதாரிகளுக்கு RM5,000 வழங்கப்படும் என்றும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுதோறும் RM300 வரை உதவி வழங்கப்படும் என்றும் அமினுடின் அறிவித்தார்.

​கடந்த 8 ஆண்டுகளின் சாதனைகளைக் காட்டி, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடுத்த 5 வருட வளர்ச்சிக்காக PH இந்தத் தேர்தல் அறிக்கையை நம்பகமான தேர்வாக முன்வைத்துள்ளது என்றார் அவர்.

36 தொகுதிகளுக்கான நெகிரி மாநிலத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!