
கோலாலம்பூர், பிப்ரவரி 23 – சுகாதார அமைச்சின் தேசிய அளவிலான மருத்துவ பரிசோதனையில், 2,122,446 மாணவர்களில் சுமார் 57,910 படிவம் 4 மாணவர்கள் thalassaemia carriers எனப்படும் குறைந்த மரபணு கொண்டவர்கள் என டத்தோ டாக்டர் சூல்கிஃப்லி அகமட் (Datuk Seri Dr Dzulkefly Ahmad) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன அடிப்படையில் மலாய் சமூகத்தில் அதிக பரவல் காணப்பட்டதுடன், அதன் பின்னர் கடசான்-டூசுன் மற்றும் சீன சமூகங்களிடம் அதிகமுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலங்களின் அடிப்படையில் சபா, சிலாங்கூர் மற்றும் கெடா மாநிலங்களில் அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மலேசிய தலசீமியா (thalassaemia) பதிவேடு 2023-இன் தகவலின்படி, நாட்டில் மொத்தம் 9,554 தலசீமியா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த தரவுகள் சுகாதார அமைச்சின் 102 மருத்துவமனைகளும், இரண்டு பல்கலைக்கழக மருத்துவமனைகளும் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையாகும்.
ஒரு தலசீமியா நோயாளிக்கு குழந்தை பருவத்திலிருந்து சுமார் 40 வயது வரை சிகிச்சை அளிக்க வேண்டிய வாழ்நாள் செலவு 3 மில்லியன் ரிங்கிட் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு நோயாளிக்கான முழு சிகிச்சை செலவு 10 மில்லியன் முதல் 13 மில்லியன் ரிங்கிட் வரை இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
தலசீமியா நோயாளிகளை குணப்படுத்த HSCT சிகிச்சை முறை அமல்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் 2007 முதல் 212 பேர் இந்தச் சிகிச்சை முறை வாயிலாக குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கான செலவு 120,000 ரிங்கிட் தேவை என்பதால் ஜீன் சிகிச்சை முறையை மேம்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.



