
கோலாலம்பூர், பிப்ரவரி-26-வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, உயர்கல்வி பட்டதாரிகளின் திறன்களை எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தைக்கு பொருத்தமாக்க, KESUMA எனப்படும் மனிதவள அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இது வெறும் தரவுகளின் அடிப்படையில் அல்ல, மாறாக வேலைவாய்ப்புச் சந்தையின் உண்மையான தேவைகளை பூர்த்திச் செய்யும் வகையில் அமைய வேண்டும் என, அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், நேற்று மேலவையில் வலியுறுத்தினார்.
இந்த நோக்கத்திற்காக, பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருடன் KESUMA கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருவதாக அவர் சொன்னார்.
இதன் கீழ், 18 ‘MyMahir Future Skills Talent Council’ அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் வரைக்குமான நிலவரப்படி, சுமார் 59,000 தொழிலாளர் தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
தவிர, மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp அதன் தொழில்பயிற்சித் திட்டம் (Internship Training Scheme) மூலம் முதலாளிமார்களின் தேவைகளுக்கு ஏற்ப நடைமுறைப் பயிற்சிகளை வழங்குகிறது.
அதே சமயம், TalentCorp தனது MyMahir SkillsLab திட்டத்தின் மூலம் தரவு பகுப்பாய்வு, AI தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் தீவிரப் பயிற்சிகளை வழங்குகிறது.
இந்தப் பயிற்சிகள், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல் உத்தரவாதத்தையும், சந்தை சராசரியை விட 5 முதல் 15 விழுக்காடு கூடுதல் ஆரம்ப ஊதியத்தையும் வழங்குகின்றன.
அரசாங்கத்தின் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், பட்டதாரிகள் வெறும் கல்வித் தகுதியோடு மட்டுமல்லாமல், எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தேவையான போட்டித்திறன் மிக்கவர்களாக உருவாகுவதை உறுதிச் செய்வதாக ரமணன் கூறினார்.



