
சிரம்பான், மார்ச்-6-நெகிரி செம்பிலான், குவாலா பிலாவில் ஒரு வீட்டின் முன்பும் தம்பினில் ஒரு கடையின் முன்பும் பன்றித் தலைகள் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை 1 மணிக்கு நிகழ்ந்த அவ்விரண்டு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என நம்பப்படுவதாக, மாநில போலீஸ் தலைவர் Alzafny Ahmad கூறினார்.
சட்டவிரோதமாக வட்டிக்குக் கடன் கொடுப்பவர் என நம்பப்படும் சந்தேக நபருக்கும், கடன் வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னையே அச்சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதாவது, வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த அழுத்தம் கொடுப்பதையே அது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மற்றபடி இது மதங்களுக்கு இடையிலான சினமூட்டும் நடவடிக்கை அல்ல என Alzafny தெரிவித்தார்.
தம்பினில் பாதிக்கப்பட்ட கடையில் இதற்கு முன்பு சிவப்பு சாயம் வீசிச் சென்ற அதே நபர் தான் இம்முறை பன்றித் தலையை வைத்துச் சென்றிருப்பதாக போலீஸ் நம்புகிறது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறும் நிலையில், தகவல் தெரிந்தோர் போலீஸைத் தொடர்புகொள்ளுமாறும் Alzafny கேட்டுக் கொண்டார்.



