Latestமலேசியா

புகிட் மெர்தாஜாம் கோயிலின் வருடாந்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது; எதிர்ப்புப் பேரணி ஏதும் இல்லை

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே அமைந்துள்ள ஸ்ரீ தேவி மருதுவார் ஜடா முனீஸ்வரர் ஆலயம் நேற்று அதன் வருடாந்திர திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடியது.

உள்ளூர் இந்து பக்தர்கள் கலந்து கொண்ட இந்த வழிபாடுகள், போலீஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு நடுவே அமைதியாக நடைபெற்றன.

கோவில் நிலம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் பேரணி அழைப்புகள் காரணமாக பதற்றம் நிலவிய நிலையில், போலீஸார் முன்கூட்டியே சாலைத் தடுப்புகளை அமைத்தனர்.

இதையடுத்து, திருவிழா அது பாட்டுக்கு மருத்துவனை நுழைவாசல் அருகே நடைபெற்ற நிலையில், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள், வருகையாளர்கள் ஆகியோர் மருத்துவமனை வளாகத்தில் தங்களின் அன்றாட பணிகளை வழக்கம் போல் தடையின்றி தொடர்ந்தனர்.

அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி அக்கோயிலுக்கு எதிராக நேற்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் இரத்தான நிலையில், பேரணியை திருவிழா கருதி ஒத்தி வைத்துள்ளோமே தவிர முழுமையாக இரத்துச் செய்யவில்லை; செபராங் பிறை போலீஸ் நிலையத்திற்கு வெளியே கூடுவோம் என ஓர் அரசு சார்பற்ற அமைப்பின் தலைவர் Sophian Zain கூறிக் கொண்டார்.

இதனிடையே, திருவிழாவும் வழிபாடுகளும் எந்தத் தடையும் இன்றி அமைதியாக நடைபெற்றதாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர் தெரிவித்தார்.

அதேசமயம், போலீஸாரின் உத்தரவை மதித்து எந்த இடத்திலும் பேரணி நடத்தக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், சயேட்சை சமய சொற்பொழிவாளரான சம்ரி வினோத் தனது கார் மீது மர்ம நபர்கள் கற்கள் எறிந்து சேதப்படுத்தியதாக சமூக ஊடகத்தில் குற்றம்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புல்லுருவிகளால் ஏதும் பிரச்னை ஏற்பட்டு விடுமோ என்ற ஒருவித பதற்றம் நிலவினாலும், ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் திருவிழா சிறப்பாக நடந்தேறியது.

அதிலும் குறிப்பாக, DAP, ம.இ.கா, பி.பி.பி, பி.கே.ஆர், உரிமை என அனைத்து கட்சிகளின் இந்தியத் தலைவர்களும் திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!