
வாஷிங்டன், மார்ச்-15-ஈரானிடமிருந்து Hormuz நீரிணையைக் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்காவுடன் இணையுமாறு, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அனைத்துலகச் சமூகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக எண்ணெய் விநியோகத்தின் மூன்றில் ஒரு பங்கு கடந்து செல்லும் அந்த குறுகிய நீரிணைப் பகுதி, இஸ்ரேல்/அமெரிக்கா மற்றும் தெஹ்ரான் இடையே அதிகரித்து வரும் மோதலால் மூடப்பட்டுள்ளது.
நீரிணையை ஈரான் மூடியிருப்பதை “உலகின் எண்ணெய் ஓட்டத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் கைக்கட்டு”என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானின் அச்செயலால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா போன்ற பல நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்பும் என எதிர்பார்ப்பதாகவும், வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிச் செய்வது உலகின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
“போரில் கிட்டத்தட்ட நிர்மூலமாகி விட்ட ஈரான், Hormuz நீரிணையை கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தி மிரட்டுவதை அனுமதிக்க முடியாது” என்றார் அவர்.
இவ்வேளையில், ட்ரம்பின் இந்த அறைகூவல், எதிரியான சீனா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கெஞ்சும் நடவடிக்கை என ஈரானிய வெளியுறவு அமைச்சு பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடிபணியாமல், அதன் இராணுவத்தை விரட்டியடிப்பதே சிறந்ததாக இருக்குமென்றும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
Hormuz நீரிணையை மூடிய ஈரானின் நடவடிக்கைக் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
இதனால் உலக பொருளாதாரத்தில் அதிர்ச்சி அலைகள் எழும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.



