
சுங்கைப் பட்டாணி, மார்ச் 16-சுங்கைப் பட்டாணியில் பட்டாசு வெடித்ததில் 4 வயது சிறுவன் பல விரல்களை இழந்ததோடு அவனது இடது கையின் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. மெர்போக்கிற்கு அருகிலுள்ள கம்போங் டெம்போயாக்கில் ( Kampung Tempoyak) மதியம் மணி 12.45 அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தபோது அந்த சிறுவன் 9 மற்றும் 2 வயதுடைய இருவருடன் இருந்ததாக நம்பப்படுகிறது.
நேற்று பிற்பகல் மணி 2.15க்கு தஞ்சோங் டாவாய் போலீஸ் நிலையத்தில் கிடைத்த புகாரைத் தொடர்ந்து கோலா மூடா போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹன்யான் ரம்லான்
( Hanyan Ramlan ) இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
பட்டாசு வெடித்த சத்தத்தையும் அதைத் தொடர்ந்து சிறுவனின் குழந்தையின் அழுகையையும் கேட்டதைத் தொடர்ந்து அண்டை வீட்டுக்காரருக்கு இச்சம்பவம் குறித்து தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட சிறுவனை குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக சுலதான் அப்துல் ஹலிம் மருத்துவமனை கொண்டுச் சென்றனர். 2001 ஆம் ஆண்டு குந்தைகள் சட்டத்தின் 31 (1) (a) பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஹன்யான் ரம்லான் கூறினார்.



