
ஈப்போ, மார்ச் 17-ஈப்போவில் தாமான் ராப்பாட் பெர்டானாவில் காலியான நிலத்தில்
தெனாகா நேசனலுக்கு சொந்தமான மின் இனைப்பு கம்பிகளான கேபளை நேற்று திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி மூவர் மரணம் அடைந்தனர்.
அப்பகுதியில் கேபள் திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்ததாக காலை 10 மணிக்கு பொதுமக்களிடமிருந்து போலீசிற்கு முதலில் புகார் வந்ததாகவும், பின்னர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீஸ் சென்றபோது , அங்கு சம்பந்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களின் உடல்களைக் கண்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் முகமட் நஜீப் ஹம்சா ( Muhammad Najib Hamzah ) தெரிவித்தார்.
35 முதல் 50 வயதுக்குட்பட்ட அந்த மூன்று சந்தேக நபர்களும் தெனாகா நேசனல் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கம்பத்தில் இருந்த மின்சார கேபளை வெட்ட முயன்றபோது, அந்த நபர்கள் அனைவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரியான மரணக் காரணத்தைக் கண்டறிவதற்காக, மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக முகமட் நஜீப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



