
ஷா ஆலாம், ஆகஸ்ட்-4-சிலாங்கூர், பண்டார் உத்தாமா டாமான்சாரா பள்ளி மாணவி கொலை வழக்கின் நீதிமன்ற விசாரணையில் அதிரவைக்கும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் பள்ளியின் கழிப்பறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட 16 வயதான Yap Shing Xuen, சுமார் 180 கத்திக்குத்து மற்றும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் போது அவரின் முக்கிய உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கு விசாரணையின் முதல் நாளான நேற்று, மருத்துவ நிபுணர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்தபோது 14 வயதாக இருந்த குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் மீது, குற்றவியல் சட்டப்பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், அரசுத் தரப்பு மேலும் பல முக்கிய சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கவிருக்கிறது.



