
கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-2027-ஆம் கல்வியாண்டில் மாரா இளநிலை அறிவியல் கல்லூரி (MRSM) மற்றும் SBP – உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து பயில விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியாகும். தகுதியுடைய இந்திய மாணவர்கள் இறுதி நேரம் வரை காத்திராமல் இவ்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு வழிகாட்டல் & சமூக வலுவூட்டல் இயக்கமான (ACE)-யின் நிர்வாக இயக்குநர் குணசேகரன் கந்தசுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மாரா நிறுவனம் மற்றும் கல்வியமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் இவ்விரு கல்விக் கழகங்களிலும் இணைந்து பயில பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு நடப்பில் 10 விழுக்காடு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் ஒவ்வோர் ஆண்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் மட்டுமே அவ்விரு கல்விக் கழகங்களிலும் பயில விண்ணப்பிக்கின்றனர்.
MRSM கல்லூரிகளும் SBP பள்ளிகளும் அனைத்துலகத் தரத்திலான கல்விச் சூழலில் முழு தங்கும் வசதியுடன் கல்வி பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன. அதோடு கல்வியில் சிறந்து விளங்கும் பல்லின மாணவர்களுடன் இணைந்து கற்பது மாணவர்களின் போட்டியாற்றலை வளர்ப்பதுடன் இந்திய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பிற்கும் புதிய கதவுகளைத் திறக்கும். மேலும் அவ்விரு கல்விக் கழகங்களிலும் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சும் கல்வியமைச்சும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருவதை குணசேகரன் கந்தசுவாமி சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, கடந்த ஆண்டுகளைப் போல மாணவர்கள் இம்முறையும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அவ்விரு கல்விக் கழகங்களிலும் இணைந்து பயில ஒரு நுழைவுத் தேர்வை எழுதினால் போதுமானது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருப்பதும் புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்த அடைவு நிலையைப் பெற்றிருப்பதும் அவசியம். B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் திரையில் காணும் அகப்பக்க முகவரியில் அடுத்தாண்டுக்கான முதலாம் படிவத்திற்கும், நான்காம் படிவத்திற்கும் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேல் விவரங்களைப் பெற இந்த புலனக் குழுவில் இணையுமாறு குணசேகரன் கேட்டுக் கொண்டார்.



