Latestமலேசியா

நஜீப்பின் RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்த உதவ நிதி திரட்டும் அம்னோ

கோலாலம்பூர், செப்டம்பர் 18 – முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் செலுத்த வேண்டிய 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்த உதவும் வகையில், அம்னோ சிறப்பு நிதி திரட்டும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.

இதற்காக கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களால் இயன்ற அளவு விருப்பத்துடன் நிதியளிக்குமாறு அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிதி திரட்டும் முயற்சி வெளிப்படையாகவும் முறையாகவும், நடைமுறையிலுள்ள அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படும் வகையில் மேற்கொள்ளப்படுமென ஸாஹிட் தெரிவித்துள்ளார். நஜீப்புக்கு நிபந்தனையுடனான மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த முயற்சியை அம்னோ முக்கிய நடவடிக்கையாக முன்னெடுக்கிறது.

பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, நஜீப் எஞ்சியுள்ள சிறைத்தண்டனையை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான நிபந்தனையாக 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதான நஜீப், முதலில் விதிக்கப்பட்ட 12 ஆண்டுச் சிறைத்தண்டனை 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

அதேவேளை, அவருக்கு விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது. நஜீப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடனான மன்னிப்பு தொடர்பான முடிவை அம்னோ வரவேற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!