
கோலாலம்பூர், மார்ச்-23-மேற்காசியாவில் தொடரும் மோதல்களால் உலக எண்ணெய் விலை திடீரென அதிகரித்ததன் விளைவாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரசாங்கத்தின் மானியம் RM700 மில்லியனிலிருந்து RM3.2 பில்லியனுக்கு எகிறியுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்தார்.
மத்தியக் கிழக்கு நெருக்கடியால் Hormuz நீரிணை பாதிக்கப்பட்டுள்ளது; மலேசியாவின் எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு அந்த நீரிணையை தாண்டித் தான் வர வேண்டும் என்பதால், மலேசியாவும் அதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது.
என்றாலும், இந்த சவால் மிக்கக் காலக்கட்டத்திலும் மக்கள் மற்றும் பெரும்பாலான வியாபாரிகள், சந்தை விலையை முழுமையாகச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
காரணம், BUDI MADANI RON95 மற்றும் Budi Diesel திட்டங்கள் வழியாக மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
உலகச் சூழ்நிலை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், மக்களின் நலனே மடானி அரசாங்கத்தின் முன்னுரிமை என்றார் அவர்.



