
குவாந்தான், மார்ச்-25-இம்மாதத் தொடக்கத்தில் அல் குர்ஆனை காலால் மிதித்து அப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றிய மாணவர், அல்-சுல்தான் அப்துல்லா மலேசிய பஹாங் பல்கலைக்கழகத்திலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் கட்டொழுங்கு செயற்குழு மேற்கொண்ட விசாரணையில், அவர் தவறிழைத்திருப்பது உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக துணை வேந்தர் Dr Yatimah Alias அதனை உறுதிப்படுத்தினார்.
பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் நடந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு, அனைத்து மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்றார் அவர்.
இனம், மதம், ஆட்சியாளர்களை உட்படுத்திய நிந்தனை அம்சங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகம் ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் விஷயங்களை பார்த்துகொண்டிருக்காது என்றும் Yatimah உறுதியாகச் சொன்னார்.
S. விக்னேஸ்வரன் எனும் அம்மாணவர் முன்னதாக குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
அல் குர்ஆனை காலால் மிதித்தது, அப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதன் மூலம் இணைய வசதியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவற்றை மறுத்து அவர் விசாரணைக் கோரியுள்ளார்.



