
பாடாங் செராய், மார்ச்-25-கூலிமில் போலீஸிடம் சிக்குவதிலிருந்து பினாங்கு வரை தப்பியோடிய காரோட்டுநர் ஒருவர், கெடா பாடாங் செராயில் பிடிபட்டுள்ளார்.
27 வயது அவ்விளைஞர், முன்னதாக கூலிமில் சந்தேகத்துக்கிடமான பெரோடுவா கன்சில் காரில் காணப்பட்டார்.
ரோந்து போலீஸார் நிறுத்த முயன்றபோது, அவர் தப்பியோடினார்.
தப்பிச் செல்லும் போது, வீட்டொன்றின் முன் அமைக்கப்பட்ட கூடாரம், நாற்காலிகள், மேசைகள் மற்றும் மற்றொரு காரையும் அவ்வாடவர் மோதினார்.
பினாங்கு வரை தப்பிச் சென்ற அவர், நேற்றிரவு Kampung Sidam Kanan பகுதியில் பிடிபட்டார்.
லாரி ஓட்டுநராக வேலை செய்யும் சந்தேக நபர் போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே ஒரு குற்றப்பதிவைக் கொண்டுள்ளார்.
சோதனையில் அவரிடமிருந்து ஷாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் தெரியவந்தது.
போலீஸ் தன் கடமையைச் செய்யவிடாமல் இடையூறு செய்தது, கவனக்குறைவாக வாகனமோட்டியது, போதைப்பொருள் வைத்திருந்தது மற்றும் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கப்பட ஏதுவாக, மார்ச் 28 வரை அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



