
ஜோர்ஜ் டவுன், மார்ச் 26-பினாங்கு , ஜாலான் சுங்கை பினாங் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள உணவகத்தில், பொதுமக்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடந்த கைகலப்பு சம்பவத்தில், ஜாலான் டத்தோ கிராமாட் போலீஸ் நியைத்தைச் சேர்ந்த இரு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் என நம்பப்படும் 20 முதல் 40 வயதுடைய எண்மர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு உதவுவதற்காக இன்னும் பலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் .
இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதோடு இதனை பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஜிசி இஸ்மாயில் உறுதிப்படுத்தினார். காயம் அடைந்த இரண்டு போலீஸ்காரர்களும் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றனர்.
சந்தேகத்திகுரிய ஆடவர் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை இரவு சுமார் 10 மணியளவில், நான்கு போலீஸ்காரர்கள் துரத்திச் சென்றபோது அந்த மோட்டார் சைக்கிள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததோடு அடுக்கு மாடிக் கட்டிடத்தின் முன்புறம் உள்ள ஒரு உணவுக் கடையில் மோதியதால் ,போலீஸ்காரர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே தகராறு மூண்டதாக தெரியவருகிறது.
இந்த மோதலின் காரணமாக போலீஸ்காரர்களில் ஒருவருக்கு கண்களிலும் கன்னங்களிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், மற்றொருவருக்கு நெற்றியில் வீக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதோடு ஒரு போலீஸ்காரருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் பொதுமக்களில் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



